எங் கதெ - இமையம்
போன பதிவில், 'நெஞ்சறுப்பு' நாவல் குறித்து எழுதியிருந்தேன்.
'நெஞ்சறுப்பு' நாவலை வாசிக்கும்போதே 'எங் கதெ' நாவலைப் பற்றிய நினைவு உள்ளுக்குள் எழுந்தபடியே இருந்தது. அப்போதெல்லாம் 'நெஞ்சறுப்பு' நாவலை முடித்த உடனே, 'எங் கதெ' நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.
வாசித்தேன். எங் கதெ, வந்த புதிதிலே வாசித்த நாவல்தான். இப்போது, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தேன். இப்போதும் புதிதாய்தான் இருக்கிறது.
விநாயகம் முப்பது வயதைக் கடந்தவன். திருமணம் ஆகாதவன். அவனது ஊருக்கு, கணவனை இழந்த, இரு பெண் குழந்தைகளுக்கு தாயான கமலா என்பவள், அரசு பள்ளியில் ஒரு வேலையைப் பெற்று வருகிறாள். ஊருக்கு வந்தவுடனே ஊர் ஆண்கள் எல்லோரது கண்களையும் பறித்துகொண்ட அழகுடையவள். அவளுக்கும் விநாயகத்துக்கும் சில மாதங்களில் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு, கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வரை நீள்கிறது. பிறகு, கமலா கடலூருக்கு சி.இ.ஓ ஆஃபிஸ்க்குப் பதவி உயர்வு கிடைத்து மாற்றலாகிப் போகிறாள். சில சூழல்களால், விநாயகத்துக்கு கமலா மீது சில சந்தேகங்கள் எழுகிறது. அதிலிருந்து அவர்களது உறவில், விரிசல் எழத் துவங்குகிறது. விநாயகம் அவளைக் கொல்லும் அளவுக்கு அவள் மீது வெறுப்பு கொண்டு அலைகிறான். அவளைக் கொல்வதற்குத் துணிந்து அவள் வீடு வரைக்கும் சென்றவன் என்ன செய்தான் என்பதாக முடிகிறது நாவல்.
வாசிக்க வாசிக்க, எங் கதெ நாவலையும் நெஞ்சறுப்பு நாவலையும் மனம் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தது. மொழியில், இரண்டு நாவல்களும் ஒரே மாதிரியானவைதான். பேச்சு மொழியில், கதைச்சொல்லிகள் தன்னிலையாக, தங்கள் கதைகளைச் சொல்லிச் செல்கின்றன.
எங் கதெ நாவலில் வருகின்ற கமலாவைப் போலவேதான் நெஞ்சறுப்பு நாவலில் வருகின்ற சசிகலாவும் இருக்கிறாள். தங்களவில், தாங்கள் எடுக்கும் முடிவுகளிலும், தங்களது செயல்களிலும், உறுதியானவர்களாக, எந்தக் குழப்பமும் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், தாங்கள் சொல்ல வருவதைச் சொல்லிவிட்டு, எதிர்தரப்புக்கு வேறெந்தப் பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் உடையவர்கள். மேலும், தங்களை நிரூபிப்பதற்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொள்ளாதவர்கள்.
அதேப்போல, 'எங் கதெ' விநாயகமும் 'நெஞ்சறுப்பு' ஸ்ரீரங்கப்பெருமாளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள். அவர்களைச் சார்ந்திருக்கும் பெண்களுக்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அவர்களுக்குக் கட்டுப்பட்டு, மன அவஸ்தைப்படுபவர்கள். அவர்களால், மிக எளிதாக, ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வர முடியாது. வெவ்வேறு உணர்வுகளும் எண்ணங்களும் நினைவுகளும் அவர்களைப் பிடுங்கித் தின்ன இடம் கொடுப்பவர்கள். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் எதையுமே அவர்களால் செய்ய முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் உழல்பவர்கள். தங்களை அந்நிலைக்குத் தள்ளியவர்கள் என்று தாங்கள் விரும்பிய பெண்களின் மீது குற்றம் சுமத்தி தப்பித்துக்கொள்ள பார்ப்பவர்கள்.
இரு நாவல்களிலும், ஆண்கள் கதைச்சொல்லிகளாக இருந்தாலும், கதையைப் பெரிதும் ஆக்கிரமிப்பவர்கள் பெண்கள்தான். கமலாவும் சசிகலாவும்! (காமாட்சியும்கூட!)
இரு நாவல்களுக்குமிடையிலான வேறுபாடு எனப் பார்த்தால்,
எங் கதெயில், விநாயகம் கமலாவைத் தேடிச் செல்கிறான். நெஞ்சறுப்பில், ஸ்ரீரங்கப்பெருமாளைத் தேடிச் சசிகலா வருகிறாள். அதேப்போல, எங் கதெயில், கமலாவை விடாமல் துரத்துபவனாக, விநாயகம் இருக்கிறான். நெஞ்சறுப்பில், ஸ்ரீரங்கப்பெருமாளைத் தொடர்பவளாக சசிகலா இருக்கிறாள்.
எங் கதெ, 110 பக்கங்கள் கொண்ட நாவல். நெஞ்சறுப்பு, 200 பக்கங்கள் கொண்ட நாவல். நெஞ்சறுப்பைக் காட்டிலும், குறுகிய பக்கங்கள்தான் எனினும், எங் கதெ நாவல்தான் ஒப்பீட்டளவில், மிக வலுவாக, அழுத்தமாக இருப்பதாக இப்போது தோன்றுகிறது.
எங் கதெ மற்றும் நெஞ்சறுப்பு நாவல்களைத் தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகர்கள் தங்களவில் இத்தகு ஒப்பீட்டைச் செய்து பார்க்காமல் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சிலர் என்னுடன் உடன்படலாம், சிலர் மாறுபடலாம்.
இரண்டையும் வாசித்து பாருங்கள்.
Comments
Post a Comment