தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ், அடையாளத்தை மீட்டெடுக்கும் மனப்போராட்டத்தின் கதை




ஓர் இலக்கியப் படைப்பு மகத்தானதாகக் கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை? நாம் தினந்தினம் நேரில் காணும் மனிதர்களைக் காட்டிலும், ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பின் வழியாக சுட்டிக்காட்டும் மனிதன் மீது நம் அக்கறை அதீதமாகக் குவிவதன் காரணம் என்ன? அவர்கள் நம்மை அதிகம் பாதிப்பது எதனால்? இதுநாள்வரையில் நாம் உதாசீனம் செய்துவந்த மதிப்பீடுகளும் நபர்களும் ஒரு படைப்பில் வெளிப்படும்போது, அவை/அவர்கள் நம்மை அதிக குற்றவுணர்வில் ஆழ்த்துவது ஏன்? இப்படியே இன்னும் இன்னுமென இலக்கியம் சார்ந்தும் ஒரு படைப்பு சார்ந்தும் அடுக்கப்படும் கேள்விகளுக்கு நம்மால் திட்டவட்டமான பதில்களைத் தொகுத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, ஒருவாறாக அவரவர் தன்னளவில் தனக்கான பதில்களை வரையறுத்துக்கொள்ளலாம்.

ஒரு மகத்தான படைப்பு என்பது வாசகனின் பார்வைகளையும் சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் மாற்றி அவனை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் திறப்பைக் காட்டக்கூடியதாக இருக்கும். தேவிபாரதியின் ‘நட்ராஜ் மகராஜ்’ எனும் நாவல், வரலாறு குறித்த கற்பிதங்கள் தம் அர்த்தத்தை இழந்துக் கொண்டிருக்கும் காலத்தில் மீட்டெடுக்கப்படும் ஒரு வரலாற்று நாயகனின் – மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் – உயிருள்ள நேரடி வாரிசான ‘ந’ எனும் சத்துணவு அமைப்பாளனின் கதையாகவும் மீட்டெடுக்கப்படும் வரலாற்றின் மீதான கிண்டலாகவும் விரிந்து, வாசகனின் மனதினில் பல்வேறு கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது. அந்த வகையில் இந்நாவல் சமீபத்தில் வந்த ஆக்கங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

‘ஓ’ என்னும் சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் பாழடைந்த அரண்மையின் காவற்கூண்டில் ‘ந’என்பவன் தன் மனைவி ‘வ’மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறான். பாதுகாப்பற்ற முறையிலும் வசதிகள் ஏதுமற்றும் அந்தக் காவற்கூண்டில் அவர்கள் வசித்து வருகிறார்கள். இப்படியான சூழலில் ஒருவர் அவனுக்கு அரசு கட்டிக்கொடுக்கும் தொகுப்பு வீடு குறித்த அரசாணையைச் சுட்டிக்காட்டிவதிலிருந்து அந்தத் தொகுப்பு வீட்டைக் கட்டுவது குறித்த எண்ணங்களும் ஆசைகளும் அவனுள் பெருகி, அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளும் பிரயத்தனங்களுமாக நாவல் நகர்கிறது.

தொகுப்புவீடு கட்டுவதற்கான அனுமதி பெற அவன் சந்திக்கும் நபர்களும், அவர்கள் அவனை நடத்துகின்ற விதமும் அவனை பெரும் சிரமங்களுக்குள் ஆழ்த்துகிறது. அவன் எல்லா சிரமங்களையும் நெருக்கடிகளையும் கடந்து வந்து தொகுப்பு வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது அவனது வாழ்க்கையையே மாற்றிப்போடும் விதமாக ஒரு தகவல் பேராசிரியர் ‘பூ’ என்பவரின் மூலமாக வந்தடைகிறது.

‘ஓ’ என்னும் சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் பாழடைந்த அரண்மையின் காவற்கூண்டில் வசித்து வரும் ‘ந’ என்பவன் வெறும் நவோ ந எனும் பெயருடைய சத்துணவு அமைப்பாளனோ அல்ல; நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரன் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள ஒரே நேரடி வாரிசு என தெரிவிக்கப்படும் சூழலிலிருந்து அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பயணமாகி முடிகிறது என்பதே நாவலின் களம்.

சத்துணவு அமைப்பாளனாகப் பணிபுரிவதற்கு அரசாணை கிடைத்ததும் ‘ந’ என்பவனுக்கு அரசு உத்யோகம் குறித்து அவனுள் பெரும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் ஏற்படுகின்றன. ஆனால் அவனது எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே தவிடுபொடியாகின்றன. அரசு உத்யோகத்தின் மூலம் தனக்கான அதிகாரத்தை ருசிக்க முடியுமென நம்பியிருந்த ந, அந்த நம்பிக்கை பொய்த்தவனாக மற்றவர்களின் அதிகாரங்களுக்கு ஆட்படுகிறான் என்பது அவலமாக நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பைனான்ஸ் கம்பெனியிலொன்றில் பணிபுரியும்போது அவன்மீது பிரயோகிக்கபடும் அதிகாரம், சத்துணவு அமைப்பாளனாக பணியைத் தொடங்கிய பிறகும் அவனுக்கு கைக்கூடாத அதிகாரம், தொகுப்பு வீடு கட்டுவதற்காக அலைந்து திரியும்போது அவன் மீது எல்லாத் தரப்பிலும் பிரயோகிக்கப்படும் அதிகாரமென அதிகாரத்தின் வேட்கை, நாவலின் பல்வேறு பக்கங்களில் மிகவும் யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ந என்பவன் வெறும் நவோ ந என்னும் சத்துணவு அமைப்பளனோ அல்ல, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன், காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடி வாரிசான, ஒரே வாரிசான பிரின்ஸ் – நட்ராஜ் மகராஜ் என்பதை அறிந்துகொண்ட பிறகு அவனுள்ளும் அந்த அதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கை எழுகிறது. ஆனாலும் கடைசி வரை அதிகாரத்தின் ருசியை அவனால் அடையவே முடிவதில்லை.

சாதாரண சத்துணவு அமைப்பாளனான ‘ந’, அரசுப் பணிக்காகவும் அரசு கட்டிக்கொடுக்கும் தொகுப்பு வீட்டுக்காகவும் அலைந்து திரிந்த ‘ந’, தகுந்த ஆதாரங்களின் மூலம் தான் ஒரு சாதாரணன் இல்லை; மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் நேரடி உயிருள்ள ஒரே வாரிசு என நிரூபிக்கப்பட்ட பிறகு தன் அடையாளத்தையும், மீட்டெடுக்கப்பட்ட தனது பெருமைகளையும் நிலை நிறுத்திக்கொள்ள அதிகம் போராடுகிறான். அதனாலேயே நாவல் முழுக்க, “ந என்பவன் வெறும் நவோ ந என்னும் சத்துணவு அமைப்பளனோ அல்ல, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன், காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடி வாரிசான, ஒரே வாரிசான பிரின்ஸ் – நட்ராஜ் மகராஜ்” என்ற வாசகம் அடிக்கடி பிரயோகிக்கப்படுகிறது என்று கருதுகிறேன். தான் காளிங்க நடராஜ மகாராஜாவின் வாரிசு என்பதைத் தெரிந்துக்கொண்ட பிறகு, தன் பரம்பரை குறித்த தேடலில் ஆழும் ந, நூலகத்துக்குச் சென்று ஆங்கிலப் பத்திரிக்கையொன்றில் தன் பரம்பரை குறித்து பேராசிரியர் பூ எழுதியிருக்கும் கட்டுரையைத் தேடிக்கண்டெடுத்துப் படிக்கும்போது இடையூறு செய்யும் சுண்டெலிகளைப் புத்தகங்களை வீசிக் கொல்வதும், வீசப்படும் புத்தகங்கள் இரண்டாக உடைவதுமாக சித்திரிக்கப்படும் காட்சிகளும் நாவலின் கடைசி தருணத்தில் ‘ந’ தன்னையறியாமலேயே கோமாளி போல அலைந்து திரியும் காட்சியும் நாவலில் மிக நுண்மையாக அணுகப்பட்டுள்ளன.

இந்நாவலின் கதைக்களமும் கதையாடலும் மிகவும் புதுமையானதாக இருக்கின்றன. நாவலில் இடம்பெறும் எந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும் ஊரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. மாறாக பெயர்களின் முதலெழுத்துக்கள் மட்டும் நாவலில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியான கதைக் கூறல் முறை தமிழில் கையாளப்படுவது இதுவே முதல் முறையெனக் கருதுகிறேன்.

தேவிபாரதி கையாளும் மொழி மிகவும் வசீகரமானது; மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவது. தமிழில் கதைக்களத்துக்குப் பொருத்தமான மொழியை கையாண்டு நாவலை அணுகுபவர்கள் வெகுசிலரே! அவர்களுள் தேவிபாரதி மிக முக்கியனாமவர் என்று தோன்றுகிறது. அதேசமயம் அவர் கையாளும் மொழியும் நடையுமே நாவலின் பக்கங்களை அதிகரிக்க செய்திருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. இன்னும் இறுக்கமாக மொழியைக் கையாண்டிருந்தால் நாவல் இன்னும் சிறப்பான ஒன்றாகப் பரிணமித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

தேவிபாரதியின் பெரும்பாலான எல்லா ஆக்கங்களின் கதைக்களங்களும் ஒரு புனைவெழுத்தாளன் எளிதாக எடுத்துக் கையாளக்கூடியவை அல்ல. அவரது ஆக்கங்களைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவன் இதை எளிதாக கண்டுகொள்ளலாம், அவரது பெரும்பான்மையான கதைகள் எல்லாமும் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்பவையாகவும் அல்லது வரலாற்றை நினைவுகூர்ந்து அவை நிகழ்காலத்தில் ஏற்படுத்திருக்கும் விளைவுகள் குறித்துமே பேசுகின்றன. அந்த வகையில் தேவிபாரதி கையாளும் கதைக்களங்கள் வாசிப்பில் தீவிர கவனத்தை கோரச் செய்பவையாகவே இருந்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகள் ஒரே வாசிப்பில் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாதவை, மீண்டுமொரு முறை வாசிக்கத் தூண்டும்படி இருப்பவை. ‘நட்ராஜ் மகராஜ்’ எனும் இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘’நட்ராஜ் மகராஜ்’’ மிக அரிதான வாசிப்பனுவத்தை வழங்கும் நாவல்.

('புதிய புத்தகம் பேசுது' ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான மதிப்புரை) 

Comments